7 படிகள் கொண்ட அழகான அம்மாவின் கோட்டை அது!
அம்மாவின் creativity மொத்தம் அதில் கொட்டி கிடக்கும்!
கின்னஸ் ரெக்கார்டு தருவது போல் பார்த்து பார்த்து அலங்காரம் செய்வாள்.
அந்த மொத்த சுத்து வட்டாரத்துக்கும் அவள் தான் கொலு ராணி!!!
முதல் நாள் இரவே பரண் மேல் தூங்கி கொண்டு இருக்கும் பொம்மைகளை அலுங்காமல் குலுங்காமல் எழுப்புவாள், அந்த 9 நாட்களுக்கு மட்டும் அவள் முட்டி வலி எங்கே போகும்னு நியூஸ்பேப்பர் பொட்டலத்தில் தூங்கி கொண்டு இருக்கும் கடவுள்களுக்கு மட்டும் தான் தெரியும்.
ஒவ்வொரு படியும் ஆயிரம் முறையாவது சரி பார்ப்பாள்..
மரப்பாச்சி பொம்மைல இருந்து பார்க், பீச்னு பின்னி எடுத்திருப்பா..!
வீட்ல இருக்குறவங்களுக்கு அரிசி பருப்பு இருக்கோ இல்லையோ, செட்டியார் அம்மாவின் முன் வகை வகையாய் ரக ரகமாய் மளிகை சாமா வச்சிருப்பா!
அப்பாவின் சம்பளமோ, வரவு செலவு கணக்கோ கேட்டால் பேந்த பேந்த முழிக்கும் அம்மா, தசாவதாரங்களின் பெரும் வரிசையும் கேட்டால் அர்த்தராத்திரியில் கூட பிசிறு தட்டாமல் சொல்லுவாள்.
பக்கத்து வீட்டு கொலுவில் ஒருமுறை LED லைட் வச்சி ரோடுல கார் ஓடுவதை பார்த்து விட்டாள், அப்புறம் என்ன சின்ன குழந்தை போல் எனக்கும் அது எப்படினு சொல்லி கொடேன்டின்னு அடம் பிடிச்சு, அடுத்த நாளே வீட்ல ஹெலிகாப்டர் வரைக்கும் பறக்க விட்டுட்டா!!!!
பின்ன, சும்மாவா கொலு ராணினு பேர் வந்திச்சு??!!
வருபவர்கள் எல்லாம் குறைந்தது 2 நிமிடமாவுது வாயடைத்து பார்ப்பார்கள். நம்ம சந்திரமுகி ஜோதிகா மாறி ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு கதை சொல்லுவாள், எங்கே எப்படி எப்போ வாங்கினேன்னு அத கேட்கவே ஒரு கூட்டம் வரும். அதுவும் அந்த மைலாப்பூர்ல வாங்கின கல்யாண செட் பத்தி பேச ஆரம்பிச்சா அச்சு அசலா கோவில சொல்லுற கதாகாலட்சேபம் மாறியே இருக்கும்..!
ஒரு நாள் கூட சலிக்காம அந்த அம்மனே மனம் உருகி, இறங்கி வர மாறி, பாட்டு பாடி கூப்பிடுவா! ஆனா, அவ பொம்மை மேல யாராவுது கை வச்சா, யாராவுது என்ன யாராவுது, இறங்கி வந்த அம்மனே கை வச்சா கூட பத்ரகாளியா மாறிடுவா.
போகும் போது, வரும் போது எல்லாம், என் கண்ணே பட்டுடும் போலன்னு சுத்தி போட்டுட்டே இருப்பா!
எதுவுமே ஆச படாத அம்மாக்கு என்னவோ கொலுமேல ஒரு தனி ஆசை!!
அந்த 9 நாளும் அவளை சுத்தி தான் உலகம்னு நினைச்சிக்குவா.
அவளுக்கு பிடிச்ச தலையாட்டி பொம்மையை பாத்து பாத்து ரசிப்பா, கூடவே இவளும் தலையை ஆட்டி நானும் இந்த தலையாட்டி பொம்மை போலவே அழகா இருக்கேன்லடின்னு வெகுளியா குழந்தை மாறி கேட்பா!!
தெரிஞ்சோ தெரியாமையோ பொம்மை போல் வாழும் அவள் வாழ்க்கைக்கு ஒளி வந்துவிடாதா என்று செய்வதறியாது நெற்றியில் மஞ்சள் குங்குமத்தோடு மங்களகரமாய் முதல் படியில் நின்று தவித்தார்கள் பாரதியும், பெரியாரும்!!

whatsapp-image-2023-10-29-at-19-53-31-9689035
whatsapp-image-2023-10-29-at-19-53-30-3996937
20

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.