(கயல் சொன்னது ஒரு விதத்தில் உண்மை தான்; முத்தம் என்ற வார்த்தை முதல் முறை அவளிடம் சொன்ன ஆண் மகன் இனியன் தானே..! கற்பனைக் கோட்டை கட்டாமல், இனியனிடமே கேட்டு விடலாம் என்று லேப் வாசலை வந்து சேர்ந்தாள்…!)

சென்ற வாரம்:

நட்சத்திரா: சார்..!

இனியன்: என்னம்மா..!

நட்சத்திரா: உங்கக் கிட்ட ஒன்னு கேட்கனும்…!

இனியன்: கேளு மா..!

நட்சத்திரா: அது வந்து…கட்டி முத்தம்… அப்படினா என்ன..?

அத்தியாயம் 8: எதிர் மறைகள்

இனியன் சிரித்துவிட்டான்..!

நட்சத்திரா: (இவனுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா..? அப்போ கண்டிப்பா கட்டிப்புடி வைத்தியம் தான் போல..) ஏன் சிரிச்சீங்க..?

இனியன்: ஒன்னும் இல்ல மா, சும்மா தான்..!

நட்சத்திரா: இப்போ சொல்ல முடியுமா, முடியாத..?

இனியன்: எம்மா தாயே..! அது சும்மா, குட்டிக் குழந்தை கண்ணத்தை பிடிச்சு இழுத்து, முத்தம் தருவாங்க பாத்து இருக்கியா..?

நட்சத்திரா: ஆமா..! அதுக்கு என்ன..?

இனியன்: அது தான் கட்டி முத்தம்..!

நட்சத்திரா: ( நாசமாப் போச்சு..! நம்ம “கட்டிப்புடி, கட்டிப்புடி டா”ன்னு வந்தா இவன் “வா வா என் தேவதையே”ன்னு பேசுறான்..!)

இனியன்: என்னமா யோசிக்கிற..! நான் தப்பா எந்த அர்த்தத்துலையும் சொல்லல..! உன்ன குழந்தையா நினைச்சு தான் சொன்னேன்..!

நட்சத்திரா: அப்படியே தப்பா நினைச்சிட்டாலும்..!

இனியன்: அட போ லூசு..!

நட்சத்திரா: நான் லூசா..! சரிதான்..! (போடா மடசாம்பிராணி)

கிளாஸ்க்கு வந்தவுடன்

கயல்: கண்டுப் பிடிச்சிட்டியா டி..?

நட்சத்திரா: என்னத்த..?

கயல்: அதான் டி அந்த (மெல்லமாக காதோரம் வந்து) கட்டி முத்தம்..!

நட்சத்திரா: குழந்தைகளுக்கு கன்னத்தில் கிள்ளி கொடுப்பாங்கல அது தான்..!

கயல்: சரி சரி..! நான் கூட பயந்துட்டேன்..!

நட்சத்திரா: எதுக்கு..?

கயல்: பின்ன..! கட்டிப்புடிச்சு முத்தம் முத்தமா கொடுத்த குழந்தை பிறந்திரும்ல..!

[அவளோட வெகுளித்தனமான பேச்சு ஒரு புறம் சிரிப்பை தந்தாலும்; மறுபுறம் எரிச்சலையும் கூடவே தந்தது..! 21 வயது பொண்ணுக்கு, என்ன பண்ணா குழந்தை பிறக்கும் என்று தெரியவில்லை..! இது தப்பா..? தப்பு தான்..! ஆனால் யார் மேல் தப்பு..? இது வரை ஆண்களிடமே பேச விடாமல், வெளி உலகமே தெரியாமல்; பொத்தி பொத்தி வளர்த்த புதல்வியை, யார் என்றே தெரியாத ஒரு ஆணிடம் கட்டிக் கொடுத்து; இந்தா.. இதான் படுக்கை, இன்று இரவு உனக்கு முதல் இரவு; உன் கணவன் சொல்வதை கேட்டு நடந்துக்கோ என்று சொல்வதும்; தானே சோறு போட்டு வளர்த்த ஆட்டை உணவுக்காகக் கொல்வதும் ஒன்று தான்..! சமயத்தில், ஆடு கூடத் தப்பிக்கும்; ஆனால் பெண்ணாக பிறந்தவள் வேட்டையாடப் படுவது உறுதி..! தாம்பத்தியம் என்பது இரு மனமும், உடலும் சேர்ந்து ஈடுபட வேண்டியது..! அடுத்து என்ன நடக்கப் போகுது என்று இரண்டு பேருக்கும் தெரிய வேண்டும்..! அப்படி நடந்தால் மட்டுமே அது தாம்பத்தியம்; இல்லை என்றால் அது வெறும் கற்பழிப்பே..! நேர்நேர் – தேமா; நிரைநேர் – புளிமா; என்று சொல்லிக் கொடுப்பது கூடவே பாலியல் கல்வியும் சேர்ந்தே சொல்லிக் கொடுத்தால் மட்டுமே கற்பழிப்பு என்ற ஒரு கொடுமை அழியும்..! இதை எல்லாம் சொன்னால், வயசுக்கு ஏத்த பேச்சு பேசு என்று வாயை அடைத்து விடுவார்கள்..! கலி காலம்..!]

கயல்: ஏன் டி, எதுவும் பேச மாட்டுற..?

நட்சத்திரா: உன் அறிவாளி தனத்தப் பார்த்து பேச்சே வரலை..!

கயல்: சரி, அத விடு..! ஆமா உன் கிட்ட போய், இந்த மாறி கட்டி முத்தம், குட்டி முத்தம்னு யாரு சொன்னா…?

நட்சத்திரா: வேண்டியவங்க..!

கயல்: பின்ன வேண்டாதவங்க வந்து முத்தம் தருவாங்களா? ஒழுங்கா சொல்லு யாருன்னு…?

நட்சத்திரா: அது வந்து…

கயல்: வந்து…

நட்சத்திரா: இனியன்..!

கயல்: அடியேய்..! அந்த மனுஷன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையா..! சிம்போசியம்ல பார்த்தபோதே நினைச்சேன் இப்படி எங்கயாவது போய் முடியம்னு..! சொன்னா கேளு..! இதோட நிறுத்திக்கோ..!

நட்சத்திரா: சரி சரி, நிறுத்திக்கலாம்..!

[ உடையார் வலிக்க வலிக்க சொல்லுவாங்கன்னு சொன்னதெல்லாம் எத்தனை உண்மை..! கயலின் பேச்சைக் கேட்டிருந்தால், நட்சத்திரா வாழ்க்கை எப்போதோ மாறி இருக்குமே..! ஆனால் விதி யாரை விட்டது..! அவள் பேசுவதை நிறுத்தாமல், கயளுடன் பகிர்வதை அல்லவா நிறுத்திவிட்டாள்..! காதல் பொல்லாததுன்னு சும்மாவா சொன்னாங்க..! எப்போதுமே முறைக்கும் இனியன் இப்போதெல்லாம் சிரிக்கிறான்..! ஆனால் வேதாள குணத்தில் மட்டும் அவன் குறை வைப்பதே இல்லை..!]

அன்று தேர்வு முடிந்ததும், விடைத்தாள் கொடுக்கும்போது, இனியன் விடைத்தாளில்: “8/50, very poor,meet me” என்று எழுதி இருந்தது..!

file-1363216

நட்சத்திரா: ஆத்தி..! சும்மா இருந்தவன நம்மளே முருங்கை மரத்துல ஏத்தி விட்டுடோமே…! நாசமா போச்சு..! எதுக்கும் போய் பார்த்திட்டு வந்திடலாம்..!

இனியன்: வா மா..!

நட்சத்திரா: வந்து பார்க்க சொல்லி இருந்தீங்க..!

இனியன்: இப்போ வேலையா இருக்கேன்..! சாயங்காலம் 5 மணி போல வா..!

நட்சத்திரா: (அவன் கோபமா இல்லையே..! ஒரு வேலை ரொமான்ஸ் பண்ணுறான..! ஒன்னும் புரியல..!) சரி சார்..!

மாலை 5 மணி:

நட்சத்திரா: சார், வந்து பார்க்க சொல்லிருந்தீங்க..!

இனியன்: ஆமா, விடைத்தாளில் ஒன்னுமே எழுதலைன்னு ஒரு விருதுக் கொடுக்க..!

நட்சத்திரா: சாரி சார்..!

இனியன்: தப்பா எழுதி இருந்தக் கூட பரவால்ல, நீ ஒன்னுமே எழுதலையே மா..! அப்படி எழுதுறத விட உன்னக்கு என்ன முக்கியாமா வேலை..!

நட்சத்திரா: (அது சரி..! உன்ன யாரு டா இவளோ அழகாப் பொறக்க சொன்னா..! உன்ன பாக்கவா, இல்ல எழுதவா..! இத்தெல்லாம் உனக்கு எப்போ புரியப்போதோ..!) சாரி சார்..!

இனியன்: நல்லா பேசுறேன், அதனால மார்க் கொடுத்திடுவேன்னு நினைச்சியா..?

நட்சத்திரா: (போச்சு போ..! வேதாளம் mode ON..! எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்..!)

இனியன்: மத்த நாள் எல்லாம் வாய் கிழியும், இப்போ என்ன வாய மூடிட்டு இருக்க..!

நட்சத்திரா: (சுர்ர்ர் என்று ஏறிய கோபத்தின் சாயல், கண்கள் குளமாக மாறியது..! )சாரி சார், இனிமே இப்படி நடக்காது..!

இனியன் அடுத்து பேசுவதற்குள் அவள் அறையை விட்டு வெளியே சென்றாள்..! இனியன் ஒரு முழு பைத்தியம் என்ற முடிவிற்கே வந்து விட்டாள், பின்ன ஒரு நாள் கட்டி முத்தம்னு சொல்லுறான்; அடுத்த நாள் காட்டு கத்து கத்துறான்..! சரியான குறைப்பிரசவம்; நல்லா இராகு காலத்துல பிறந்து என் உயிரை எடுக்குதுன்னு தலைவிதியை நொந்து கொண்டு வீட்டிற்கு சென்றாள்..!

இரவு பத்து மணி இருக்கும், நட்சத்திரா போனில் இனியன் பேர் தெரிந்தது..!

இனியன்: கோவமா..!

நட்சத்திரா: இல்ல..!

இனியன்: உன்ன திட்டி இருக்கக்கூடாது, மன்னிச்சுக்கோ..! கட்டி முத்தம்…!

நட்சத்திரா: (பெரிய பாராங்கல்லை எடுத்து தலையில் போடலாம் போல் கோபம் வந்தது) நீங்களே வச்சிக்கோங்க..! ரொம்ப தான்க்ஸ்..!

(அந்தக் கடுப்பில், மூன்று – நான்கு நாட்கள் சரியாக பேசவில்லை.. இனியனை பார்க்கக் கூட இல்லை..! திடீரென்று, இனியன், பூதம் க்ளாஸ் நடத்தும் போது வந்து; நட்சத்திராவை அழைத்து சென்றான்..!)

நட்சத்திரா: என்ன, அன்னைக்கு அழ வச்சது பத்தாத..? திரும்ப அழ வைக்கனுமா..?! நான் போரேன்..!

இனியன்: எம்மா..! எம்மா..! நில்லு மா..! என்மா வார்த்தையாலையே கொல்லுற..! அதுக் கூட பரவாயில்லை யாரையோ பார்க்குற மாறி கண்டுக்காம வேற போற..! என்னால உன் கிட்ட பேசாம இருக்க முடியல..! ஏன் பேச மாட்டிங்குற..?

நட்சத்திரா: அதெல்லாம் ஒன்னும் இல்ல..! நல்லா தான் பேசுறேன்..!

இனியன்: தெய்வமே..! தப்பு தான் திட்டினது..! சாரி..!

நட்சத்திரா: சரி, மன்னிச்சுட்டேன்..!

இனியன்: அடிப்பாவி, தப்பு நீ பண்ணி; என்ன மனிப்பு கேட்க வைக்கிற பாத்தியா..! நானும் வெட்கமே இல்லமா கேட்குறேன் பாரு..! என்ன டி பன்ன என்ன?

நட்சத்திரா: என்னது டி ஆஆஆஆ…!

இனியன்: ஆமா டி தான்; வாயப் பொளக்காத..!

நட்சத்திரா: அப்புறம்..?

இனியன்: ரொம்ப நாளவே சொல்லனும்..!

நட்சத்திரா: என்னத்த சொல்லனும்..!

இனியன்: அது… சுத்தி வளைச்சு பேச வராது…!

நட்சத்திரா: சரி.!

இனியன்: எனக்கு நீ வேணும்..!

நட்சத்திரா: (சுட்டு எரிக்கும் பார்வையுடன்) என்னது…?

இனியன்: தப்பா இல்ல டி, ஆ..! ஊ..!னா முறைக்காத..! முழுசா கேளு… பொறுமை கெட்டவளே..!

நட்சத்திரா: நான் வேணும்னு சொன்னா..!

இனியன்: ஆமா எனக்கு நீ வேணும்; என் கூட; என் அம்மாவா; என் மறு பாதியா; என் மகளா; ஏன் என்னுடைய மொத்த உலகமா நீ மட்டும்; எப்போதும் இருப்பியா..?

(தொடரும்)


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published.