(மாதவிடாயின் பதில் இல்லாத கேள்விகளும், அந்த நேரத்தில் இனியனின் அனுசரித்த பேச்சும், அவன் மீது அளவு கடந்த மரியாதையை உண்டாக்கியது. ஆனால், இனியன் தான் வேதாளம் ஆச்சே! அடுத்த நாளே முருங்கை மரம் ஏறிவிட்டான்)
சென்ற வாரம்:
ப்ரேக்கில், நட்சத்திராவும் அவளது நண்பன் கிஷோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்….
கிஷோர்: இனியன், உன் ஆளு தான! சொல்லு….
நட்சத்திரா: தேவை இல்லாம பேசாத, ஆளுனா நான் ஏன் காலையில அவ்வளோ வசவு வாங்கப் போறேன்…
கிஷோர்: நான் மட்டும் இல்ல டி, நீ ஊத்துரத பார்த்து ஊரே அப்படி தான் பேசுது…
(உண்மைய சொல்லி விட்டான் என்ற கோபத்தில், அவன் மீது தண்ணீர் ஊற்றி முடித்தாள்…. அவள் கெட்ட நேரம், இனியன் சரியாக உள்ளே வந்தார்..)
இனியன்: என்ன நடக்குது இங்க….?
அத்தியாயம் – 4: ஆகாயத் தாமரை
(இரண்டு பேரும் திருதிருவென முழித்தார்கள்; ‘என் அப்பன் புதருக்குள்ள இல்லை’ என்பது போல் கிஷோர், ‘நான் இல்ல சார்…. இவ தான்…’, என்று போட்டுக் கொடுத்துவிட்டான்…)

நட்சத்திரா: (சும்மாவே திட்டுவான்; இப்போ இது வேற; காலையில யார் மூஞ்சில முழிச்சேனோ…. நாள் அமோகமா போது…!)
இனியன்: கயல், என்ன ஆச்சுன்னு நீ சொல்லு மா…
நட்சத்திரா: (ஹப்பாடா..! கெட்டதுலையும் ஒரு நல்லது; எப்படியும் என் பக்கம் தான் பேசுவா..!)
கயல்: இல்ல சார், நான் சரியா கவனிக்கலை..
நட்சத்திரா: (சகுனி நாயே…பெரிய உண்மை விளம்பி…! ”கள்ளன நம்பினாலும் குள்ளன நம்பக் கூடாது”ன்னு சும்மாவ சொன்னாங்க… துரோகி…! போச்சு இன்னிக்கு நமக்குக் கச்சேரி தான்..!!)
அதற்குள், ”அவ உயரத்துக்கு அவ ஸ்டூல் போட்டு பார்த்தக் கூட தெரியாது” என்று கிஷோர் முணுமுணுக்க, நட்சத்திரா சிரித்துவிட்டாள்….
இனியன்: என்னம்மா, சிரிப்பு ரொம்ப பலம்மா இருக்கு..?
நட்சத்திரா: (அய்யோ.! கிரைம் ரேட் வேற ஏறுதே…! திரும்ப ஒரு மணி நேரம் வெளியே நிற்கச் சொன்னா கால் வலிக்குமே…! சரி இது வேலைக்கு ஆகாது.. நடிப்ப போட்டுற வேண்டியது தான்...!) கலங்கிய கண்களோடு…. அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்..
கிஷோர்: நான் தான் சொன்னேன்ல சார்; இவதான் என் மேல தண்ணி ஊத்தினான்னு…
இனியன்: ஏன்டா, மாடு மாறி வளர்ந்து, பொம்பள பிள்ளைய கை காமிச்சுட்டு நிக்கிற, பாவம் அந்த பொண்ணு, டேய்.. நீ கிளாஸ விட்டு வெளில போ மொதல்ல…!! நட்சத்திரா, நீ உட்கார்ந்து க்ளாஸ் கவனி மா..!!
நட்சத்திரா: (ஹப்பாடா, நினைச்ச நேரத்துல இந்த அழுகை மட்டும் வரலை… நம்ம பொழப்பு நாறிடும்...)
கிஷோர்: நான் பாட்டுக்கு சிவனேன்னு தான டி இருந்தேன்; நல்லா கல்லுளிமங்கி மாறி வாயத் தொறக்காமையே உன்னால என்ன செய்ய முடியுமோ, நல்லாவே செஞ்ஞிட்ட..!
நட்சத்திரா ஒன்றுமே பேசவில்லை.. அவளுக்கு மட்டும் இல்ல, மொத்த க்ளாஸ்க்குமே பேச்சு வரவில்லை… அது எப்படி பேச்சு வரும்! அதான் வேதாளம் முருங்கை மரம் உச்சியில் இருந்து, அடி வேர் வரைக்கும் இறங்கி விட்டதே..! அவளுக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி, ஆனால் அதே சமயம், மனம் உறுத்திக்கொண்டே இருந்தது; சரி உண்மையை சொல்லி, அப்படியே போன் நம்பர்க்கு அடி போட்டு வரலாம் என்று முகத்தை பாவமாக மாத்திக் கொண்டு இனியன் ரூமிர்க்கு நடை போட்டாள்….
நட்சத்திரா: சார்….
இனியன்: என்னம்மா..?
நட்சத்திரா: அது வந்து…
இனியன்: நான் வேலையா இருக்கேன்… அப்புறம் வா மா…!
நட்சத்திரா: அது இல்ல சார்…காலையில….என் மேல தான் தப்பு…!
இனியன்: தெரியும்…
நட்சத்திரா: தெரியுமா…? அப்புறம் ஏன் சார்…..?
இனியன்: சொன்னா புரியாதா…. இங்க என்ன வேலை வெட்டி இல்லாமையா இருக்காங்க…? அப்புறம் வா..
(அவளோ தான், வேதாளம் முருங்கை மரம் ஏறியது, அவன் நாய் குறைப்பது “வள்ளுன்னு” பேசியதைக் கண்டு, நம்பர் வாங்கும் ஆசை, வந்த திசை தெரியாமல் பறந்து ஓடியேவிட்டது..)
இப்படி வேதாளம், ஏறி இறங்கியே ஆறு மாதங்கள் முடிந்தது. சரி.. இனிமே இனியன் நியாபகமே வேண்டாம், ஒழுக்கமா படிப்ப மட்டும் பார்ப்போம் என்று முடிவு எடுத்தாள்…ஆனால் விதி யாரை விட்டது… அடுத்த நாளே ப்ராஜேக்ட் விவரங்கள் பட்டியல் வெளி வந்தது….
”நட்சத்திரா – 12AA35 – கைடு – இனியன்”
அதை பார்த்த ஒரு நொடி, அவளுக்கு மேல் மூச்சும்- கீழ் மூச்சும் போட்டிப் போட்டு வாங்கியது..!! போச்சு, குரங்குக்கு வாக்கு பட்டாச்சு, இனிமே மரத்துக்கு மரம் தாவ வேண்டியது தான்… என்று தன்னை தானே சமாதனம் செய்து கொண்டிருக்கும் போது, இன்னொரு ஜீவன் மேல் மூச்சு-கிழ் மூச்சு வாங்கி நெஞ்சை பிடித்து உட்கார்ந்து இருந்தது.. வேற யாரும் இல்ல; நம்ம சகுனி தான்.. (கயல்)
நட்சத்திரா: என்ன டி ஆச்சு, என்னோட ஆக்ஷன் எல்லாம் நீ பன்னுரா..?
கயல்: கலங்கிய கண்களோடு…. எனக்கு யாருன்னு பாரு டி கொஞ்சம்… அய்யோ நெஞ்சு எல்லாம் வலிக்குதே..!
“கயல் – 12AA30 – கைடு – அம்சவேனி”
நட்சத்திரா: ஆத்தி…. இரு டி.! எனக்கே லைட்டா நெஞ்சு வலிக்குது….
(சாதரணப் பெயரா அது..!! கல்லூரியே நடுங்கும் பேர் ஆச்சே…!! வேற யாரும் இல்ல.. HOD தான் அது…)
பெயர் : அம்சவேனி – பெயர்ல மட்டும் தான் அம்சம், மத்தபடி மொத்த நாராசம்…!
பட்ட பெயர் : பூதம்
வயது : முக்கால் கிழவி
வேலை : HOD..!! அதாவுது, மற்றவர்கள் குடியை கெடுப்பது..!
குணம் : என்ன பேசினாலும் அதற்கு நேர் மாறாக புரிந்துக் கொண்டு, குடும்பத்தையே கழுவி ஊத்துவது….
சில பல உதாரணங்கள்….
சம்பவம் 1 :
நட்சத்திரா: இரண்டு நாள் லீவ் வேண்டும் மேம்ம்… அண்ணன் கல்யானம்…
பூதம் : பத்திரக்கை எடுத்திட்டு வா..!
நட்சத்திரா: (பத்திரக்கையை, வேலை மெனக்கேட்டு கொரியர் பன்னி, எடுத்திட்டு வந்த பின்) மேம், பத்திரிக்கை..
பூதம் : அது சரி, இது உங்க அண்ணன்னு நான் எப்படி நம்ப..?
நட்சத்திரா: (நாசமா போச்சு… விட்டா DNA சாம்பிள் வர கேட்பா போலயே….) பத்திரிக்கையில என் பெயர் இருக்கு மேம்…
பூதம் : ஒ ஹோ..! ஆமா நீ உங்க அண்ணன் கல்யானம்னு ஊர் பொறுக்க போவ, நான் லீவ் தரனுமா..? அதெல்லாம் முடியாது, ஒழுங்கா க்ளாஸ் வந்து சேரு…!
நட்சத்திரா: (இதுக்கு அப்போவே தர மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே…! ‘பைத்தியமா இவ!!’ பீலிங்…., வடிவேலு சொல்வது போல) சரி மேம்.. (வேற வழி!!)
சம்பவம் 2:
நட்சத்திரா: மேம்… வர சொல்லி இருந்தீங்க…
பூதம்: ஆமா பா, இந்த வாட்டி பொங்கல் கொண்டாட்டம், நீ இன்சார்ஜ் எடுத்து பண்ணிரு பா… பட்ஜெட் போட்டுக் கொண்டு வா…!
நட்சத்திரா: (சைத்தான் சைக்கில்ல வருதே…! பேசாம எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்..) இல்ல மேம்.. அது வந்து….
பூதம்: உன் கிட்ட நான் கேட்கலை, சொல்லுரேன்..!! போய் செய் போ..!
நட்சத்திரா: சரி மேம்…
(2 நாட்கள் பின், கஷ்டப்பட்டு முயன்று போட்ட பட்ஜெட்டை கையில் எடுத்துக்கொண்டு நரகவாசலுக்குச் சென்றாள்)
பூதம்: என்னது இது…?
நட்சத்திரா: மேம்.. பட்ஜெட்… பொங்கலுக்கு….
பூதம்: உன்ன மொதல்ல யாரு இன்சார்ஜ் எடுக்க சொன்னா..?
நட்சத்திரா: (விளங்கிடுச்சு…!) நீங்க தான் மெம்…
பூதம்: நான் சொன்ன..! உனக்கு எங்க போச்சு அறிவு!! போய் படிக்கிற வேலைய பாரு போ..! இந்த காலத்து பசங்களுக்கு படிக்கிறத விட மத்த எல்லாத்துலையும் தான் ஆர்வம் அதிகமா இருக்கு..!!
நட்சத்திரா: (ஏன் சொல்ல மாட்ட, நான் பாட்டுக்கு ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’ன்னு தான சுத்திட்டு இருந்தேன்…பூதம்..பூதம்… சும்மாவே கூப்பிட்டு திட்டுது.. உன்ன ஒரு நாள், அம்மி கல்லுல வச்சி, நல்லா மிளகா அரைக்கிற மாறி.. அரைக்கிறேன் பாரு!)
சம்பவம் – 3
நட்சத்திரா: மேம், பாத்ரூம்ல தண்ணி வரலை.. உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க..!
பூதம்: அப்படியா, நான் என்னன்னு பாக்குறேன்…!
நட்சத்திரா: (பூதம் திருந்திடுச்சா..! இப்படி எல்லாம் பேசாதே...!) சரி மேம்…
பூதம்: ஒரு நிமிஷம், நான் கவனிக்கலை திரும்பி சொல்லு…!
நட்சத்திரா:( அதான பாத்தேன், எப்படி திருந்தும் பாரு..!!) பாத்ரூம்ல தண்ணி வரலை…
பூதம்: கெக்க கெகக் கெக்க (வேற ஒன்னும் இல்ல, பூதத்தோட நாரசாமான சிரிப்பு தான்...)
நட்சத்திரா: (சரியான கேனக் கிறுக்கி… எதுக்கு சிரிக்கிறான்னே தெரியலியே…)
பூதம்: தண்ணி வரலைன்னா பாத்ரூம் போகாத..! இல்ல வீட்ல இருந்து கூடக் கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வா.!
நட்சத்திரா: (அடியே பூதம்..!! உன்கிட்ட சொன்னேன் பாத்தியா… என் புத்திய செருப்பாலயே அடிக்கனும்..!) சரி மேம்..
இதெல்லாம் நினைச்சுப் பார்த்த, கயல் நெஞ்சப் பிடிச்சிட்டு உட்கார்ந்ததுல தப்பே இல்ல…! ஆனால், அதன் பின் நட்சத்திராவ பார்த்த ஊரே கேட்கிற ஒரே கேள்வி : “பாத்து டி..! நீ ஊத்துரதுல மொத்த கட்டிடமும் சுனாமி வந்த மாறி மூழ்கிட போது..!” ஆமா, ஊருக்கே தெரியுது, ஆனா இனியனுக்கு மட்டும் தெரியாது என்று சலித்துக் கொண்டே திரும்பினாள்.. பார்த்தா.. இனியன்…
இனியன்: என்ன மா… ரொம்ப சலிச்சிக்கிற…?
நட்சத்திரா: (கேட்டு கேக்காத மாறி இருக்கான, இல்ல உன்மையிலியே கேட்கவிலையா...) அதெல்லாம் இல்ல சார்..
இனியன்: அது சரி… யாரு மா உனக்கு இன்சார்ஜ்..?
நட்சத்திரா: நீங்க தான்…. (32 பள்ளும் தெரிந்தது)
இனியன்: அதான் சலிச்சிக்கிட்டியோ..!
நட்சத்திரா: (ஆமா, ஏன் சொல்ல மாட்ட..!!! நான் குடம் குடமா ஊத்துரது தெரியல, நான் சலிச்சிக்கிட்டா மட்டும் உடனே தெரிஞ்சிடும்…) அது எல்லாம் வரம் சர், நீங்க இன்சார்ஜா வர…!!
இனியன்: எப்பா….சாமி ஐஸ்ஸ் தாங்கல….. ப்ராஜேக்ட் தான, நல்ல சிறப்பா பண்ணிடலாம்..!
அதைக்கேட்டவுடன் அவளுக்குள் 1000 பட்டாம் பூச்சி சடசடவென பறந்தது…!!
நட்சத்திரா: (இதான் நல்ல வாய்ப்பு, போன் நம்பர் வாங்கிடலாம்…) சார்.. நம்பர் தர்ரீங்களா, எதாவது சந்தேகம் வந்தா கேட்க…
இனியன்: உனக்கு நடத்தும் போதே சந்தேகம் வராது… இதுல, போன்ல எப்படி வரும் பாரு…!
(அவ்வளோ தான்!! 1000 பட்டாம் பூச்சியும் ஒரேடியா மருந்து அடிச்சி கொன்னாச்சு….!!)
நட்சத்திரா: சரி சந்தோஷம் சார்… (மட சாம்பிராணி..! நீ எல்லாம் கன்னி கழியாம தான் சாவ பாரு…!)
அன்று அவள் ஆசைப்பட்ட நம்பர், இன்று போனில் இருந்தும் பேச தோன்றவில்லை…. அவள் மனம் முழுதும், எழிலனை சுற்றியே இருந்தது…அவனிடம் பழையதை சொல்ல வேண்டும் என்று மட்டுமே இருந்தது… சரி, இன்னிக்கு என்ன ஆனாலும் சரி, அவர் வந்தவுடன், கடவுள் மேல் பாரத்தை போட்டு.. உண்மையை சொல்லி விட்டு, வாழ்க்கைய ஆரம்பிக்க வேண்டியது தான் என்ற முடிவுடன் காத்து இருந்தாள்…
காலிங் பெல் அடித்தது……
எழிலன்: ஏய் பொண்டாட்டி, என்ன டி எனக்கு தான் வெய்டிங் போல….
நட்சத்திரா: ஆமாங்க..!
எழிலன்: பார்ரா… என்ன டி மல்லிப்பூ எல்லாம் வச்சிட்டு, சும்மா கும்முன்னு இருக்க…?
நட்சத்திரா: அய்ய….அலையாதீங்க….அல்ப மாறி…!
எழிலன்: என் பொண்டாட்டி, நான் அலையுறேன்; உனக்கு என்ன டி..?
நட்சத்திரா: ஆமா.. ஆமா.. போடா…! அழுக்கு மூட்டை!!
எழிலன்: என்னோட செதுக்கி வச்ச சிலையே, இரு டி…மாமன் குளிச்சிட்டு வந்து பேசிக்கிறேன்…!!!
(தொடரும்)
0 Comments